Wednesday, August 29, 2012

TET தனி வகுப்புகள் - கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?


கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல...

பல தகுதியற்ற ஆசிரியர்களை உருவாக்கிய பின் ”ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தொழில் பாடம் ” என்றொரு பாடம் B.Ed படிப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளீடு செய்யப்பட்டு தனியாக வகுப்புகள் மூலம் இந்த பயிற்சி பயிற்சி நிறுவனங்களின் மூலம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் tnteu Vice Chancellor. திரு. ஐி. விஸ்வநாதன் அவர்கள்.

அப்படி என்ன பாடத்திட்டம்?

கொஞ்சம் கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்..

http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

மேலே உள்ள லிங்கின் மூலம் நீங்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடதிட்டத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

இதனை பதிவிறக்கம் செய்து அதன்படி தேர்விற்கு தயாராக வேண்டிய அவசியமே இல்லை... காரணம் இதில் 1-8 வகுப்பு வரை உள்ள பாடதிட்டத்தின் தொகுப்பே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் தகுதித் தேர்வில் பாதி வினாக்களுக்கு மேல் இந்த பாடதிட்டத்தினை கடந்த ஆசிரியர்களின் திறனை சோதிக்கும் வினாக்கள்தான் வினவபட்டன..

எனவே முதலில் இந்த பாடதிட்டத்தினை முழுவதுமாக இதுதான் என்று TRB கொடுக்க வேண்டும் என்பது தேர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்பாக உள்ளது.

சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு


ஆசிரியர் தகுதித் தேர்வால் கடந்த சில ஆண்டுகளாக படுத்திருந்து B.Ed , D.T.Ed மோகம் இப்போது அதிகரித்துள்ளது இதற்கு காரணம் தேர்வினை எழுதி தேர்ச்சி அடைந்து வேலைக்கு சென்று விடலாம் என்ற படிப்பவரின் விருப்பம்தான்..

ஆனால் இதுவரை 7 லட்சம் பேர் இதற்காக பல ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை பணத்தினை கல்வி நிறுவனங்களில் கொடுத்து படித்துவிட்டு காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

மேலும் 12 லட்சம் ஆசிரியர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவதாக மனிதவளத்துறை அறிவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும்  7 லட்சம் ஆசிரியர்கள் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்ற வீணான வார்த்தைகளை நம்பி யாரும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தினை விட அதிகமாக கட்டணம் செலுத்தி B.Ed கல்லூரிகளிலும்... ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என அனைத்தினையும் அலசி ஆராய்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Sunday, August 26, 2012

TET தேர்வில் தோல்வி யார் மீது குற்றம்?


இந்திய வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ... போட்டித் தேர்வில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றால் அது கடந்த சூலை மாதம் 12 ஆம் தேதி நடந்த TNTET2012 தேர்வாகத்தான் இருக்கும்.

இதற்கு காரணம்...
1. வினாத்தாளின் கடினத்தன்மையா?
2. ஆசிரியர்களின் போதிய பயிற்சி இன்மையா? ( என்ன செய்கின்றன ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும்/ இளங்கலை கல்வியியல் பட்டயம் அளிக்கும் கல்வி நிறுவனங்களும்? )
3. வினாத்தாளின் கடினத்தன்மைக் கேற்ற போதிய நேரமின்மையா?
4. தேர்வு அறையில் எதிர்பாராத விதமாக.. வினாத்தாளை பார்த்த அதிர்ச்சியா?
5. காலையில் இட்லி சாப்பிட்டதாலா?
6. இரவில் தூங்காமல் படித்ததாலா?...
இப்படி என்னதான் காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தாலும்... கடைசியாக வரும் ஒரே பழி...

ஆசிரியர்களுக்கு போதிய திறன் இல்லை என்பதுதான்...

பாவம் பார்த்து... மனிதாபிமானம் பார்த்து... இரக்கப்பட்டு...  என தேர்வு வாரியம் கூறும் அனைத்தும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்களை ( இதில் நல்ல திறனுள்ள ஆசிரியர்களும் அடங்கிவிட்டனர் என்பதுதான் மனவருத்தம்) திட்டுவதாகவே தோன்றுகிறது.

எந்த தேர்வினை தரமான தேர்வு என்று தேர்வு வாரியமும் மனித வளத்துறையும் தன்னைதானே எக்காளமிட்டுக்கொள்கின்றன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

இதுவரை சிறந்த ஆசிரியர் பட்டம் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் அமரவைத்து இந்த வினாத்தாளை கொடுத்து எழுத சொன்னால் தெரியும்... அவர்கள் எந்தளவு சிறந்த ஆசிரியர்கள் என்று...

வினாத்தாள் கடினம் என்று ஒன்றும் இல்லை.... இதில் பாடத்தில் உள்ளவை கொஞ்சம் சிந்தித்து பதிலளிக்கும்படியாகவும்... பல  பாடபுத்தகத்தினை தாண்டிய படிக்கும் சிந்தனையை ஊக்குவிக்கும் படியாகவும் கொண்ட வினாக்களாகவுமே உள்ளன...

ஊடகங்கள் உறுமிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்... ஒரு சதவிகித திறமையான ஆசிரியர்கள் கூட இல்லையா? என்பது... ஆம் எந்த துறையில்தான் திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... இன்றைய சூழலில்  பட்டம் பெறவேண்டும் பதிவு செய்யவேண்டும் என்றுதான் எல்லோரும் படித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிவினை விருத்தி செய்துக்கொள்ள வேண்டும் அறிவினை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றல்ல...

ஒரு ஆசிரியர் என்பவர் அனைத்தையும் தம் அறிவு முதற்கொண்டு மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பவராக இருக்கவேண்டும் ஆனால், நம்மில் பலருக்கே அந்த எண்ணம் இல்லாமல் போய்விட்டது.


 இன்று தோல்வியுற்றது ஆசிரியர்கள் அல்ல மாறாக கடந்த 20 ஆண்டுகளாக பயிற்றுவித்த ஆசிரியர்கள் தான்...இந்த தேர்வு நல்ல ஆசிரியர்களை இன்று உருவாக்குமோ இல்லையோ... ஆனால் நல்ல மாணவர்களை நாளை உருவாக்கும் என்பது திண்ணம்...

Thursday, August 23, 2012

TNPSC - ஓர் கண் துடைப்பா?

இன்றைய தமிழக இளைஞர்கள் பலரின் கனவு... ஓர் அரசாங்க வேலை...

அரசாங்க வேலை பெற இரு வகையான வழிமுறைகள் கையாளப்படுகின்றன..

1. வயது மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன் படி வேலை கொடுப்பது.

2. போட்டித் தேர்வுகளை வைத்து அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களை தேர்வு செய்து வேலை அளிப்பது.

இதில் முதலாவதாக கூறப்படடது பட்டயக் கல்விகளுக்கும் பின்னதாக கூறப்பட்டது பட்டங்களை பெற்றவர்களுக்கும் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission. மாநில மறு சீரமைப்புக்குப் பின் 1957- ல் இது மதராசு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” என்று மாறிவிட்டது.

ஆம் , நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே TNPSC தொடங்கப்பட்டு தனது அரசாங்க வேலை அளிக்கும் பணியினை மத்திய அளவில் SSC போல் செய்து வருகிறது. 

பழமை எனினும் தனது ஒவ்வொரு கால கடடத்திலும் தேர்வு முறையில் புதுமைகளை கையயாண்டு இன்று இளைஞர்களின் கனவினை கொஞ்சம் அதிகரித்து விட்டுள்ளது என்பதே உண்மை.



தமிழக இளைஞர்களில் பெரும்பாலானோர்  ஏன் TNPSC ஐ நம்பி இருக்கிறார்கள்? 

 காரணம் இருக்கிறது, மத்தியில் அரசாங்க பணியில் சேர ஆங்கிலம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்... இல்லாவிட்டால் இந்தியாவாவது அறிந்திருக்க வேண்டும்.. ஆனால் TNPSC தேர்விற்கு தமிழ் தெரிந்திருந்தால் போதுமானது.

தமிழக அரசியலில் இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக நாம் பல நவோதயா பள்ளிகளை இழந்துவிட்டோம்.. இதன் விலைவாக இன்று கிராமபுரங்களில் உள்ள திறன்மிக்க மீத்திறன் மாணவர்கள் சாதாரண அரசு பள்ளிகளில் படித்து அவர்களின் திறன்கள் இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

அது மட்டும் இல்லாமல், தமிழ் தமிழ் என்று நாம் தமிழை வாழ வைக்கிறோமோ இல்லையோ அதனை நாம் சிறிது சிறிதாக சாகடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இலங்கை,  சிங்கப்பூர் , மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள   தமிழர்கள் தமிழை அவ்வளவு அழகாக பேசுகின்றனர்! அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும், பிலிபைன்ஸ் மொழியும் தெரியும் , கூடுதலாக சீன மொழியும் தெரியும்...அங்கு ஒளிபரப்பாகும் பன்பலை வானொலிகளில் கூட தமிழ் தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் இன்று நாம் தமிழையும் ஒழுங்காக பேசாமல்... வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆங்கிலத்தினையும் முறையாக கற்காமல்... கூடுதலாக ஒரு இந்திய மொழியை கூட கற்க மனமில்லாமல் இருக்கிறோம் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.


 வினாத்தாள் வெளியாகும் விவகாரம்..

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று மாட்டி இருக்கிறார்கள் சிலர்... இதில் பலரை பற்றிய தகவல்கள் வெளி வரவில்லை...

வினாத்தாள் வெளியாகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?

இத்தனை ஆண்டுகளாக 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை...

ஒன்றை யோசித்து பாருங்கள் சென்ற VAO தேர்வில் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் 200 பேர்...

இப்படி முழு மதிப்பெண்ணை அள்ள இது என்ன எளிமையான தேர்வா? அனைத்து வினாக்களுக்கும் விடை தெரிய இந்த மதிப்பெண்களை எடுத்தவர்கள் என்ன அனைத்தும் அறிந்த கலைக்களஞ்சியமா?
என்ன நடக்கிறது TNPSC இல்?

காலம் காலமாக தேர்வு எழுதி எழுதி சலித்து போன பலருக்கு தெரியும் TNPSC என்ன செய்கிறது என்று.

  • ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் கூட்டாக வேலை கிடைத்து செல்வதும்.
  •  இதற்கென இயங்கிவரும் பயிற்று மையங்களில் படிப்பவர்களில் பலருக்கு வேலை கிடைப்பதும் என..
இது மட்டும் அல்லாமல் பணம் கொடுத்தால் வேலை என்றும் இருந்த காலங்கள் உண்டு.. இப்போதும் மறைமுகமாக சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தி நீங்களும் நானும் அறிந்ததே..

பல அதிகாரிகளையும் அரசாங்க பணியாளர்களையும உருவாக்கும் இவ்வகையான அமைப்பு முறையில் அடிப்படையிலேயே ஒரு பெரிய தவறு காலம் காலமாக இருந்து வருகிறது ...

அதுதான் ”பணம் கொடுத்தால் எல்லாம் முடிந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை”

இந்த நம்பிக்கையை மெய்யாக்க  டீபாய் முதல் இதற்கான உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் வரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  இந்த தவறால் எத்தனை சதவிகித அளவிற்கு உண்மையான முறையில் இதுவரை வேலை அளிக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக் குறியே..

எதற்கு இந்த அயோகியதனம்? திறமை உள்ளவனுக்கு வேலை என்று ஒரு பதாகையை மாட்டிவிட்டு உள்ளே சென்றால் பணம் கொடுத்தால்தான் வேலை என்று கூறுவது இன்றைய தனியார் நிறுவனம் முதல் அரசாங்க வேலை வழங்கும் நிறுவனங்கள் வரை தொடர்ந்து நடந்துவருகின்றன.

அப்படி பணம் பெறுவதாக இருந்தால் அரசாங்கமே இந்த பணத்தினை ஒரு வேலைக்கு இவ்வளவு என்று வெளிப்படையாக அறிவித்து அதன்படி பணி வழங்கினால் அரசாங்க லாபம் கூடுமல்லவா?



அது சரி இனி என்ன செய்யலாம்?

மக்களால் மக்களுக்காக நடக்கும் ஆட்சியில்... எதையும் நாம் முடிவு செய்ய முடியாது..உண்மைதானே!. அது சரி உங்களின் எண்ண பிரதிபலிப்பு என்ன இந்த விடயதில் கீழே பதிவிடுங்கள்...
Guestbook